காவல் தேவதை – Tamil Novels Kaaval Devathai Episode 2

காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 2 பதிவில் நமது கதையின் நாயகி ஆனந்திக்கும் கதையின் நாயகன் கணேசனுக்கும் நடக்கும் சம்பவங்களை எழுதியுள்ளேன்.

காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai episode 2

இன்ஸ்பெக்டர் ஆனந்தியிடம் ” நீங்கள் வெகு நாட்களாக கேட்ட உங்கள் சொந்த மாவட்டமான திருச்சிக்கு இடமாறுதல் வந்துவிட்டது ” என்று சொன்னவுடன் அவளுக்கு துள்ளிக்குதித்து கொண்டாட வேண்டும் போல் இருந்தது.

” இனி குடும்பத்தை பிரிந்து சென்னையில் இருக்க வேண்டாம், தாய் தந்தையுடன் நேரத்தை செலவு செய்யலாம், வீட்டு சாப்பாடு சாப்பிடலாம், எல்லாத்தையும் விட முக்கியமாக கணேசனை சந்திக்கலாம், கணேசனுடனே இருக்கலாம் ” என்று நினைத்த ஆனந்தி மிகவும் சந்தோஷப்பட்டாள்.

அதன் பிறகு 20 நாட்களில் திருச்சிக்கு மாறுதலுக்கு தேவையான வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான திருச்சிக்கு ஆனந்தி கிளம்பினாள், திருச்சி செல்லும் பேருந்தில் இரவு பதினோரு மணிக்கு ஏறியவள் திருச்சி பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 4:00 மணிக்கு வந்து சேர்ந்தாள்.

பஸ் ஸ்டாண்டில் அவளுக்காக அவள் அண்ணன் திவாகரன் காத்திருந்தான்,

” அண்ணா, எப்படி இருக்க? அண்ணி எப்படி இருக்காங்க? நேத்து போன் பண்ணும் போது அப்பாவுக்கு காய்ச்சல்னு சொன்னியே, இப்போ பரவாயில்லையா? ” என்று தனது குடும்பத்தினர் நலத்தை பற்றி திவாகரனிடம் ஆனந்தி விசாரித்தாள்.

” எல்லோரும் நல்லா இருக்காங்க, நீ எப்படி இருக்க? உடம்பு இளைத்து விட்டது போல் தெரிகிறது, ஒழுங்கா சாப்பிடுகிறாயா இல்லையா? என்று தனது தங்கையின் நலனைப் பற்றி விசாரித்துக் கொண்டே அவளது லக்கேஜை வாங்கி காரின் டிக்கியில் வைத்தான்.

” கணேசன் வரவில்லையா அண்ணா, நேற்று போன் பேசும்பொழுது காலையில் பஸ் ஸ்டாண்டுக்கு கூப்பிடவா என்று சொல்லியிருந்தேனே ” என்று அருகில் கார் ஓட்டிக் கொண்டிருந்த திவாகரனை கேட்டாள்.

” விடியற்காலை நான்கு மணிக்கு அவனை வரச் சொன்னால் எப்படிமா வருவான், அவன் வேலையெல்லாம் முடித்துவிட்டு அவன் இரவு தூங்குவதற்கு ஒரு மணி ஆகிவிடுகிறது, அதனால அவன் நல்லா தூங்கிக் கொண்டிருப்பான் ” என்று கணேசன் தனது தங்கையின் கேள்விக்கு பதிலளித்தான்.

அதன்பிறகு ஆனந்தி காரில் உள்ள டிவிடி பிளேயரை ஆன் செய்து பாட்டு கேட்க ஆரம்பித்தாள், 5.15 மணி அளவில் தங்கள் வீட்டிற்கு இருவரும் வந்து சேர்ந்தனர். ( காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 2 )

வீட்டில் அம்மா, அப்பா, அண்ணி காயத்ரி ஆகிய மூவரும் காத்திருந்தனர்.

அம்மா அப்பாவிடம் நலம் விசாரித்துவிட்டு ” குட்டி பாப்பா எப்ப வருவான் ” என்று லேசாக மேடிட்ட வயிறோடு நின்றிருந்த அண்ணி காயத்திரியை கேட்டாள்.

” இப்போதானே ஐந்து மாதம் ஆகிறது, குழந்தை பிறப்பதற்கு இன்னும் நாள் இருக்கிறது ” என்ற பதில் தாய் புஷ்பத்திடம் இருந்து வந்தது.

சிறிது நேரம் எல்லோரிடமும் பேசி விட்டு சிறிது நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம் என்று தனது அறைக்குள் சென்றாள், இரவில் பஸ்ஸில் வந்த அலுப்பால் படுத்தவுடனே ஆனந்தி தூங்கிவிட்டாள், எழுந்தது காலை 10 மணிக்குதான், அதுவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவளை சாப்பிடுவதற்காக அவளுடைய அம்மாதான் எழுப்பினார்.

தன் அறையைவிட்டு வெளியே வந்த ஆனந்தியை ” குளித்துவிட்டு வா சாப்பிடலாம் ” என்று காயத்ரி சொல்ல

” அண்ணி, முதல்ல காபி கொடுங்க, குடித்துவிட்டு குளிக்கப் போகிறேன் ” என்று ஆனந்தி சொன்னாள்.

” சரி இரு, எடுத்துட்டு வரேன் ” என்று சொன்ன காயத்ரி சமையலறைக்குள் செல்ல, அவள் பின்னாடியே சென்ற ஆனந்தி அங்குள்ள திண்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

” உங்க அண்ணனை பாக்கவே முடியல,ரொம்ப பிஸி போல? என்று கணேசனை பற்றி அண்ணியிடம் கேட்டாள்.

” கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாப்பிட வந்தான், நீ வந்துட்டியான்னு கேட்டான், ஆமா அவ தூங்கிட்டு இருக்கான்னு சொன்னேன், சரி நான் சாயங்காலம் வந்து அவள பாத்துக்குறேன் என்று சொல்லிட்டு சாப்பிட்டுட்டு ஆபீஶிக்கு கிளம்பிட்டான் ” என்ற பதில் சொன்ன காயத்ரி காபியை தனது நாத்தனாரிடம் நீட்டினாள்,

காப்பி குடித்துவிட்டு குளிக்கச் சென்றவள் அரை மணி நேரம் கழித்து சந்தன நிற சுடிதார் அணிந்து கொண்டு தனது அறையிலிருந்து வந்தாள், சாப்பாட்டு மேஜையில் அவளுடைய அப்பாவும், அண்ணனும் இவள் வருவதற்காக சாப்பிடாமல் காத்திருக்க அவர்கள் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.

தனது மகள் வெகு நாட்கள் கழித்து ஊரிலிருந்து வருவதால் ஸ்பெஷலாக பூரி பொங்கல் வடை என்று தயார் செய்து வைத்திருந்தாள் புஷ்பம், தான் செய்ததை அனைவருக்கும் பரிமாறியவள் ” என்னங்க, நீங்களாவது சொல்லக் கூடாதா வயது 25 ஆயிற்று, இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறாள், வரன் பார்க்கலாமா என்று கேட்டால் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக் கொண்டே போகிறாள், சொந்த ஊருக்கு டிரான்ஸ்பராகி வந்து விட்டாள், இப்பொழுதாவது வரன் பார்க்க ஆரம்பிக்கலாமா என்று கேட்டு சொல்லுங்கள் .”

” ஆமாம்மா, வருடங்களும் போய்க் கொண்டே போகிறது, வாழ்க்கையில் செட்டிலும் ஆகிவிட்டாய், இனி என்னம்மா தடை? வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்தானே ” என்று கேட்ட நல்லசிவம் தன் மகளின் முகத்தையே கேள்வியாய் பார்த்தார்.

” அப்பா, ஒருவாரம் பொறுங்கள், நான் சிறிது யோசித்து விட்டு சொல்கிறேன் ” என்ற பதில் ஆனந்தியிடம் இருந்து வந்தது.

” நீ யாரையும் விரும்புகிறாய் என்றாலும் சொல், அவர்கள் குடும்பத்தில் பேசி திருமணத்தை முடித்து வைக்கிறோம் ” என்று நல்லசிவம் சொன்னார். ( காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 2 )

” அவர் அப்படி சொன்னவுடன் சற்று திகைத்துதான் போனாள் ” அப்படியெல்…. ஒன்றும் இல்லையப்…, என்று திணறியபடி பேசியவள் ” அப்பா நான் ஒருவாரத்தில் சொல்கிறேன் ” என்று சொல்லிவிட்டு தனது பேச்சை முடித்துக் கொண்டாள்.

அதன்பிறகு அமைதியாக அனைவரும் சாப்பிட்டு முடித்தனர், காலை உணவை முடித்து பின்பு நல்லசிவம் தனது வேலைகளை பார்க்க வயலுக்கு சென்று விட, திவாகரன் தனது அலுவலகத்திற்கு கிளம்பினான்.

அதன்பிறகு ஹாலில் சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.

” நீ எப்பொழுது டூட்டியில் ஜாயின் பண்ண வேண்டும் ” என்று காயத்ரி கேட்டாள்.

” அடுத்த வாரம் புதன்கிழமை ஜாயின் பண்ண வேண்டும் “

” வீட்டை பிரிந்து வெளியூரிலிருந்து வேலை பார்த்திருக்கிறாய், ஒரு வாரம் நான் உனக்கு நன்றாக சமைத்து போடுகிறேன், நன்றாக சாப்பிட்டுவிட்டு தெம்பாக டூட்டியில் ஜாயின் பண்ணு ” என்று செல்லமாக காயத்ரி தனது நாத்தனாருக்கு ஆணையிட்டாள்.

சிறிது நேரம் டிவி பார்த்தும், சிறிது நேரம் அண்ணி மற்றும் அம்மாவுடன் பேசிக் கொண்டும் அன்றைய பகல்பொழுதை கழித்தாள் ஆனந்தி.

இரவு 8 மணி அளவில் ஆனந்தியின் வீட்டிற்கு சாப்பிட வந்தான் கணேசன், தன் தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்ததில் இருந்து அவன் இங்குதான் சாப்பிடுகிறான். மூன்று வருடங்களுக்கு முன்பு கணேசன் மற்றும் காயத்ரியின் அம்மா சரஸ்வதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார்.

அவர் இறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான் கணேசன் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேசியராக வேலைக்குச் சேர்ந்திருந்தான், தாயின் இறப்பிற்கு பிறகு கணேசன் குடும்பத்தின் வருமானத்தை பார்த்துக்கொள்ள காயத்திரி வீட்டைப் பார்த்துக் கொண்டாள்,

திடீரென தாயின் இழப்பை சந்தித்த கணேசன் சமாளிக்க முடியாமல் திண்டாடினான், அப்பொழுது அவனுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தவள் ஆனந்திதான், அதன் பிறகு சிறிது காலம் கழித்து ஆனந்தியின் வீட்டில் திவாகரனுக்கு பெண் தேடினர், இரண்டு மூன்று இடத்தில் வரன் பார்த்தும் சரியாக ஒன்றும் அமையவில்லை.

ஆனந்தி தன் பெற்றோரிடம் ” அண்ணனுக்கு இவ்வளவு இடத்தில் பெண் பார்த்தும் அமையவில்லை, நாம் ஏன் காயத்ரியை கேட்டு பார்க்க கூடாது “

சிறிது நேரம் யோசித்த நல்லசிவம் ” நல்ல பெண்தான், ஆனால் தாயில்லாத பெண்ணாக இருக்கிறாள், ஒரு நல்லது கெட்டது என்றால் யார் பார்ப்பார்கள்? என்று கேட்டார்.

” கணேசன் இருக்கான், அவன் காயத்ரிக்கு எல்லா முறையையும் நல்லவிதமாக செய்வான், அண்ணனுக்கு காயத்ரியை போல நல்ல பெண் கிடைப்பது கஷ்டம், பார்த்துக்கொள்ளுங்கள் ” என்று ஆனந்தி சொன்னாள்.

” ஆமாங்க, காயத்ரி நல்ல பெண், டிகிரி வேறு முடித்திருக்கிறாள், அழகாக வேறு இருக்கிறாள், இதை விட வேறு என்ன வேண்டும் ” என்று புஷ்பம் தன் கணவனிடம் சொன்னாள்.

அதன்பிறகு எல்லா காரியங்களும் விறுவிறுவென நடந்தன, ஒரே மாதத்தில் திவாகரன் காயத்திரி திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. காயத்ரி சென்ற பிறகு கணேசன் சாப்பாட்டு விஷயத்தில்தான் மிகவும் கஷ்டப்பட்டான், வீட்டில் தானாகவே சமைத்து பார்த்தான் ஆனால் அவனுக்கு ஒத்து வரவில்லை, ஹோட்டல் சாப்பாடு தான் நமக்கு சரியான வழி என்று தினமும் ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்தான்.

ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்த மூன்றே நாளில் வாந்தி, வயிற்றுப் போக்கு என மிகவும் கஷ்டப்பட்டான், அவனை மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனந்திதான் கணேசனை மருத்துவமனையில் கூட இருந்து பார்த்துக் கொண்டாள், மருத்துவமனையில் சேர்த்த அன்று மாலை காயத்ரி, அவள் கணவன் மற்றும் அவள் தாய் மூவரும் கணேசனை பார்க்க மருத்துவமனைக்கு வந்தனர், கணேசனை மருத்துவமனை பெட்டில் பார்த்த காயத்திரியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை, ( காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 2 )

கணேசனுக்கு அருகில் உட்கார்ந்து காயத்திரி அழுது கொண்டிருக்க அப்பொழுது ஆனந்தி ஒரு யோசனை சொன்னாள். ” அண்ணி நீங்க இப்படி அழுதுகொண்டே இருந்தால் உங்க அண்ணனுக்கு எல்லாம் சரியாகிவிடுமா அல்லது நல்ல சாப்பாடுதான் கிடைத்துவிடுமா, பக்கத்து தெருவுலதான கணேசன் இருக்கான், தினமும் நம் வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டியதானே “

” ஏய் ஆனந்தி, அதெல்லாம் சரி வராது, நான் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறேன் ” என்று சொல்லி ஆனந்தியின் யோசனைக்கு மறுப்பு தெரிவித்தான்.

” பொண்ணு கொடுத்த இடத்தில் ஓசியில் சாப்பிடுவது நல்லா இருக்காது என்று தானே நினைக்கிறாய், நான் ஒரு யோசனை வைத்திருக்கிறேன், ஹோட்டலுக்கு செலவழிக்கும் பணத்தை நீ என் அண்ணனிடம் கொடுத்து விடு, அதுவுமில்லாமல் இனி என் அம்மா சமைக்கப் போவது இல்லை அல்லவா உன் தங்கைதானே இனி சமைக்க போகிறார்கள் ” என்று ஆனந்தி சொன்னாள்.

” ஆமா மச்சான், தங்கச்சி சொல்றதுதான் சரி, அவள் சொல்கிற மாதிரி செய்து கொள்ளலாம், உங்களுக்கு ஒரு கல்யாணம் ஆகிற வரைக்கும்தானே ” என்று திவாகர் சொல்ல வேறு வழியில்லாமல் கணேசனும் ஒத்துக்கொண்டான்.

அதன் பிறகு ஆறு மாதம் கழித்து ஆனந்தி முயற்சி செய்துகொண்டிருந்த எஸ் ஐ வேலை கிடைத்தது, ஆனால் அவளுக்கு போஸ்டிங் கிடைத்த இடம் சென்னை, சிறிது காலம் அங்கு தங்கி வேலை பார்த்துவிட்டு அதன் பிறகு திருச்சிக்கு மாற்றல் வாங்கி வந்துவிடலாம் என்று குடும்பத்தினர் அனைவரும் முடிவு செய்தனர்.

ஆனந்தி சென்னையில் வேலைக்கு செல்லும் பொழுது அவளுடன் உடன் சென்றது திவாகரனும், கணேசனும்தான், அவளுக்கு அங்கு தங்க அரசாங்கத்தால் வீடு கொடுக்கப்பட்டது. அவளுக்கு அங்கு தங்குவதற்கான எல்லாவகையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு திவாகரன், கணேசனும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

கிளம்புவதற்கு முன் திவாகரன் ஆனந்தியிடம் ” புது இடம், போலீஸ் வேலை வேற அதனால் பார்த்து இருந்துக்கோ, யாரிடமும் தேவையில்லாமல் வம்புக்கு போகாதே, உன் மேலதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்துக்கோ ” என்று தன் தங்கைக்கு பொறுப்புள்ள அண்ணனாக அறிவுரை கூறினான்.

அதன்பிறகு ஆனந்தி கணேசனிடம் ” தினமும் போன் பண்ணு, நன்றாக சாப்பிடு, உன்னால் முடிந்தால் எப்போதாவது ஒருநாள் சென்னைக்கு வந்துவிட்டு போ ” என்று சொன்ன ஆனந்தி கணேசனைப் பிரிய வேண்டிருப்பதை நினைத்து கண் கலங்கினாள்.

” நல்ல சாப்பிடுறேன், நீ சொல்ற மாதிரி நடந்து கொள்கிறேன், நீயும் உன் உடம்பை பார்த்துக்கொள், முந்திரிக்கொட்டை மாதிரி எல்லா விஷயத்திலும் முன்னாடி போய் நிக்காதே, எந்தவித பிரச்சினையிலும் நீயாக போய் மாட்டிக் கொள்ளாதே ” என்று சொன்ன கணேசனும் இதுவரை தனக்கு எல்லாமாக இருந்த தனது தோழியை விட்டு பிரிவதை நினைத்து கண்கலங்கினான்.

போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகு ஆனந்திக்கு அங்கு உள்ள வேலையே சரியாக இருக்க அவளால் ஊருக்கு வர முடியவில்லை, கணேசன் மாதத்துக்கு ஒரு தடவை சென்னை சென்று அவளைப் பார்த்துவிட்டு வந்தான். கடைசி மூன்று மாதமாக அவனுக்கும் வேலை அதிகரித்துவிடவே அவனும் அவளைப் பார்க்க செல்ல முடியவில்லை.

இரவு சாப்பாட்டிற்கு வந்த கணேசன் தேடியது ஆனந்திதான், ” காயத்ரி, ஆனந்தியை எங்கே ஆளையே காணோம்?” என்று தன் தங்கையிடம் விசாரித்தான்.

” இப்பொழுதுதான் தன்னுடைய தோழியை பார்த்து விட்டு வருகிறேன் என்று வெளியே போனாள் “

” எப்போது வருவாள்? என்று கணேசன் மீண்டும் தனது கேள்வியை தங்கையிடம் கேட்டாள்.

” நேரமாகும் என்று சொன்னாள், நீ சாப்பிட்டு கிளம்பு அண்ணா, நாளை ஞாயிற்றுக்கிழமைதானே, நாளை அவளைப் பார்த்துக்கொள் ” என்று காயத்ரி சொல்ல கணேசனுக்கு ஏமாற்றமாகிப் போனது, தனது உயிர் தோழி நீண்ட நாட்கள் கழித்து ஊருக்கு வந்திருக்கிறாள் அவளைப் பார்க்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டான்.

தனது அண்ணனுக்கு பிடிக்குமே என்று சப்பாத்தியும், குருமாவும் செய்து வைத்திருந்தாள் காயத்ரி, ஆனால் கணேசனுக்கு உணவில் நாட்டம் செல்லவில்லை, ” எவ்வளவு நாட்கள் கழித்து ஊருக்கு வந்திருக்கிறாள், என்னை பார்ப்பதைவிட அவளுடைய தோழி அவளுக்கு முக்கியமாக போய்விட்டாளா? என்று மனதில் நினைத்துக் கொண்டே சப்பாத்தியை சாப்பிடாமல் தட்டையை பார்த்துக் கொண்டிருந்த கணேசனின் கண்களை பின்னாடி இருந்து இரு கைகள் மூடியது, ( காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 2 )

தனது கண்களை மூடிய கைகளை தடவி பார்த்தவன் ” ஏய் ஆனந்தி, நீ உன் தோழியை பார்க்க வெளியில் சென்று இருக்கிறாய் என்று காயத்ரி சொன்னாள்? ” என்று தனது சந்தேகத்தை கேட்டான்.

தனது கைகளை அவனது கண்களில் இருந்து எடுத்துவிட்டு ” நான்தான் சொல்ல சொன்னேன், சும்மா உனக்கு ஒரு சர்ப்ரைஸ், சரி நான்தான் உன் கண்களை மூடினேன் என்று எப்படி கண்டுபிடித்தாய்?”

” உன் கைகளை எனக்கு தெரியாதா, சரியான முரட்டு கை ” என்று அவன் சொல்ல

” என்னையே கிண்டல் பண்ணுகிறாயா!” என்று கேட்ட ஆனந்தி கணேசனை அடிக்க கைகளை ஓங்கினாள்.

தொடரும்………..

காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 2 பதிவில் கணேசன் குடும்பத்தை பற்றியும் ஆனந்தி குடும்பத்தை பற்றியும் எழுதியுள்ளேன். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்.

காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 1

முடிச்சுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *