காவல் தேவதை – Tamil Novels Kaaval Devathai Episode 1

காவல் தேவதை – Tamil Novels Kaaval Devathai Episode 1 பதிவில் ஒரு மென்மையான ஆணுக்கும், துடிப்பான பெண்ணுக்கும் உள்ள நட்பையும் காதலையும் நாவலாக எழுதுகிறேன்.

காவல் தேவதை – Tamil Novels Kaaval Devathai Episode 1

15 வருடங்களுக்கு முன்பு

தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான திருச்சி அருகில் உள்ள கிராமம் தான் அம்மையபுரம், ஊரை சுற்றி பச்சை பசேலென்ற வயல் வெளி, அதில் கண்ணுக்கு அழகாக வெள்ளை நாரைகள். வயல் வெளிகளைக் கடந்து அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் ‘அரசினர் மேல்நிலைப்பள்ளி, அம்மையபுரம்’ என்ற பெயர் பலகை வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு அடித்த கட்டிடத்தின் வாசலின் மேல் ஆர்ச் வடிவில் வைக்கப்பட்டிருந்தது.

‘ இதுதான் சுற்றி இருக்கிற கிராமங்களுக்கு அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி.’

இப்பொழுது நாம் பள்ளிக்கூடத்தின் உள்ளே சென்று பார்க்கலாம், அனைத்து வகுப்பிலும் ஆசிரியர்கள் பாடம் எடுத்துக் கொண்டிருக்க மாணவர்களில் சிலர் பாடத்தை கவனித்துக் கொண்டும், சிலர் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தனர்.

நாம் தேடி வந்தவர்கள் வகுப்பில் இல்லை, நாம் அவர்களை பார்க்க விளையாட்டு மைதானத்திற்கு செல்ல வேண்டும்.

” ஏய் ஆனந்தி ” என்று கத்திக்கொண்டே ஓடி வந்த வள்ளி, அங்கு கபடி விளையாடிக் கொண்டிருந்த ஆனந்தியின் முன் மூச்சிரைக்க வந்து நின்றாள்.

” எதுக்குடி இப்படி கத்திக்கொண்டு வருகிறாய்? என்ன விஷயம் என்று சொல் ” என்று வள்ளியிடம் ஆனந்தி சற்று எரிச்சலாக கேட்டாள்.

” நம்ம கணேசனை ஏழாம் வகுப்பு படிக்கிற வினோத் அடித்துவிட்டான், கணேஷ் வகுப்பறையில் அழுது கொண்டிருக்கிறான், அதான் உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன் ஆனா நீ இவ்வளவு எரிச்சல் படுற!” என்று வள்ளி சலித்துக்கொண்டாள்.

தான் விளையாடிக்கொண்டிருந்த கபடி விளையாட்டை பாதியில் விட்டுவிட்டு ஓட்டம் எடுத்தவள் போய் நின்ற இடம் கணேசன் முன்னால்தான். ( காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 1 )

” ஏய் கணேசா எதுக்காக அழுதுகிட்டு இருக்கிற? உன்னை அடித்தது அந்த வினோத்தானே…! எதற்காக அடித்தான் ஏதாவது தவறு செய்தாயா?

” நான் ஒன் பாத்ரூம் போயிட்டு திரும்பி வரும்பொழுது கிளாஸ் ரூம்ல இருந்து வந்தவன் என் மேல் மோதிட்டான், அவன்தான் யார் கூடவோ பேசிக்கொண்டு வந்து என்னை கவனிக்கவில்லை, ஆனா அவன் நான்தான் மோதினேன் என்று சொல்லி கன்னத்தில் அடித்து விட்டான் ” என்று அழுதுகொண்டே கணேசன் ஆனந்திக்கு பதில் சொன்னான்.

” அதுக்கு எதுக்கு பொம்பள மாதிரி அழுதுகிட்டு இருக்க! உன்ன அடிச்சுட்டான்ல நான் அவனை என்ன பண்ணுகிறேன் என்று பார் ” என்று ஐந்தாம் வகுப்பு படிக்கிற ஆனந்தி அவளுடன் ஒரே வகுப்பில் படிக்கும் கணேசனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஏழாம் வகுப்பு அறை நோக்கி சென்றாள்.

” வேணாம் ஆனந்தி, வினோத் நம்மை விட பெரிய பையன், அவனிடம் நாம் சண்டை போட்டால் பிரச்சனை நமக்கு தான் வரும் ” என்று கணேசன் ஆனந்தியை தடுக்கப் பார்த்தான்.

ஆனால் அவன் சொல்வதை சட்டை செய்யாத ஆனந்தி நேராக ஏழாம் வகுப்பு அறைக்கு சென்று வினோத்திடம் ” எதுக்கு நீ இவனை அடித்தாய், உன்மேல் தப்பை வைத்துக்கொண்டு இவனை எதற்காக அடித்தாய்?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.

” நான் அப்படி தான் அடிப்பேன், உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று ஆனந்தியிடம் வினோத் கேள்வி கேட்டான்.

அவன் அப்படி கேட்டவுடன் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆனந்தி வினோத்தின் கன்னத்தில் ஒரு அறை வைத்தாள்.

கன்னத்தில் அறை வாங்கிய வினோத் பேந்த பேந்த முழித்தான், தன் நண்பனுக்காக வயதில் மூத்தவன் என்று பாராமல் அடித்த ஆனந்தி பள்ளிக்கூடத்தில் சில பிரச்சனைகளை சந்தித்தாள். வினோத் தலைமையாசிரியரிடம் புகார் செய்ய அவர் ஆனந்தியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி கூறினார்.

” உங்க பொண்ணு ஓரளவு படிக்கிற பெண் என்றாலும் அடாவடிதனம் அதிகமாக இருக்கிறது, யாராவது உங்கள் பெண்ணிடம் சிறு பிரச்சினை செய்தால் கூட உடனே கையை நீட்டி விடுகிறாள், அதுவும் அவள் கூட படிக்கின்ற கணேசனுக்கு ஒரு பிரச்சினை என்றால் உங்கள் பெண் அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறாள், பத்து வயது பெண் போல் இல்லை உங்கள் பெண்ணின் நடவடிக்கை, உங்கள் பெண்ணை கணேசனுடன் சேரவிடாமல் நீங்கள் கண்டிப்பது நல்லது ” என்று தலைமையாசிரியர் ஆனந்தியின் பெற்றோரான நல்லசிவம், புஷ்பம் தம்பதியிடம் அறிவுரை சொன்னார்.

” சரி சார், இனி என் பெண் எந்தவித பிரச்சினைக்கும் செல்லாமல் நான் பார்த்து கொள்கிறேன் ” என்று நல்லசிவம் தலைமையாசிரியரிடம் உறுதி கொடுத்துவிட்டு கிளம்பினார்கள்.

பள்ளிக்கூடம் முடிந்து ஒன்றாகவே கிளம்புகிறார்கள், கணேசனும் ஆனந்தியும்.

ஆனந்தியின் வீட்டிற்கு முன்பே கணேசனின் வீடு இருப்பதால், கணேசன் தன் வீடு வந்தவுடன் ” சரி ஆனந்தி, நான் கிளம்புகிறேன், நாளை பள்ளிக்கூடத்தில் பார்க்கலாம் ” என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு செல்கிறான்.

கணேசனை வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்குச் வந்த ஆனந்தி வீட்டிற்குள் வரும் பொழுதே ” நீ வீட்டிற்கு வந்தவுடனே அப்பா உன்னை மேலே வர சொன்னார் ” என்று அவளின் அண்ணன் திவாகர் சொன்னான்.

தன் புத்தகப்பையை உள்ளறையில் வைத்துவிட்டு தன் அப்பாவை பார்க்க மேலே சென்ற ஆனந்தி ” என்னப்பா, கூப்பிட்டீங்களா? என்று ஆனந்தி கேட்க,

” ஆமாம்! நீ பள்ளிகூடத்தில் ரொம்ப அடாவடித்தனமாக நடந்து கொள்கிறாயமே, அதுவுமில்லாம அந்த கணேசன் பையனுக்கு சப்போர்ட் செய்து மற்ற எல்லாரிடமும் பிரச்சனை வளர்த்துக் கொள்கிறாயாமே, இது உனக்கு தேவையா? உன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இரு ” என்று நல்லசிவம் தன் மகளை கோபத்துடன் கண்டித்தார்.

” நான் அடாவடித்தனமாக நடந்துகிறது கிடையாது, ஆனால் என்னுடனோ அல்லது என் பிரண்ட் கணேசனுடனோ யாரும் பிரச்சினை செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன், நானாக யார் பிரச்சினைக்கு செல்ல மாட்டேன் ஆனால் யாரும் என் பிரச்சனைக்கு வந்தாலும் சும்மா விடமாட்டேன் ” என்று தன் அப்பாவிடம் ஆனந்தி சொன்னாள்.

” உனக்கு எதுவும் பிரச்சினை என்றால் நீ சண்டைக்கு போவது சரி, கணேசனுக்கு எதுவும் பிரச்சனை என்றால் அவன் பார்த்துக் கொள்வான், நீ தலையிடாதே! ” என்று நல்லசிவம் சொல்ல,

” அதெல்லாம் முடியாது அப்பா, அவனுக்கு எல்லாமே நான்தான் அவனை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்பேன் ஆனால் கணேசன் விஷயத்தில் மட்டும் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் ” என்று சொல்லிவிட்டு மாடியிலிருந்து கீழே போனாள் ஆனந்தி.

தன் பத்து வயது பெண்ணா இப்படி பேசுகிறாள் என்று ஆச்சரியத்துடன் கீழே செல்பவளை நல்லசிவம் பார்த்துக்கொண்டிருந்தார்.

சரி, அப்படி என்னதான் கணேசனுக்கும், ஆனந்திக்கும் இவ்வளவு நெருங்கிய நட்பு என்று பார்ப்போமா,

ஆனந்திக்கும், கணேசனுக்கும் அடுத்தடுத்த தெருக்களில்தான் வீடு, கணேசனின் தந்தை மெய்யப்பன் ஊருக்காகவே வாழ்ந்தவர், ஊரில் எவருக்கேனும் ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக போய் நிற்பது மெய்யப்பன்தான், ஒருதடவை பக்கத்து ஊருக்கும், அம்மையபுரத்துக்கும் சிறு பிரச்சனை ஏற்பட அதை சமாதானப்படுத்த சென்ற மெய்யப்பனை கத்தியால் ஒருவன் குத்தி விட்டான், ஊர்மக்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

மெய்யப்பன் இறக்கும்போது கணேசனுக்கு மூன்று வயது அதைத் தவிர அவனது தங்கை காயத்ரி 6 மாத கைக்குழந்தை, கணேசனுடய தாய் சரஸ்வதி தன் கணவன் ஊருக்கு உதவப் போய் இறந்துவிட்டதால் தன் மகனை மென்மையானவனாகவே வளர்த்தாள், ” யாருடனும் எந்த பிரச்சனைக்கும் செல்லக்கூடாது, யாராவது நம்மிடம் வம்பிழுத்தாலும் நாம் ஒதுங்கிதான் செல்ல வேண்டுமே தவிர நாம் அவரிடம் பிரச்சனை செய்யவோ சண்டைக்கு செல்லவோ கூடாது ” என்று சொல்லி தன் மகனை கிட்டத்தட்ட ஒரு கோழையாகவே வளர்த்தாள்.

கணேசனும், ஆனந்தியும் பக்கத்து பக்கத்து தெரு என்பதால் ஒன்றாகவே விளையாடுவார்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.

அம்மையபுரம் பண்ணையாருக்கு ஊருக்குள் நிறைய தோப்புத் துறவுகள் மற்றும் தோட்டங்கள் இருந்தன, அதில் மாந்தோட்டம் ஊரில் மிகவும் பிரபலம், சுற்றுவட்டாரத்தில் பண்ணையாரின் தோட்டத்தில் காய்க்கின்ற மாங்காவுக்கும், மாம்பழத்துக்கும் கிராக்கி ஜாஸ்தி, அவர் தோட்டத்தில் காய்க்கின்ற மாம்பழத்திற்கு தனி சுவை உண்டு, அதன் காரணமாக ஊரில் சில பேர் பண்ணையாரின் தோட்டத்தில் திருட்டுத்தனமாக மாம்பழங்களைப் பறித்து கொண்டு போவதுண்டு, அந்த திருட்டை தடுக்க இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை தனது தோட்டத்திற்கு காவல்காரரக நியமித்திருந்தார், அவர் வந்த பிறகு தோட்டத்தில் திருட்டு வெகுவாக குறைந்து விட்டது.

” கணேசா மாம்பழ சீசன் வந்துவிட்டது, எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ” என்ற ஆனந்தி தனது ஆசையைச் சொன்னாள்.

” உன் அப்பாகிட்ட கேளு, அவர் திருச்சிக்குப் போகும் பொழுது வாங்கி கொண்டு வந்து கொடுப்பார் ” என்று கணேசன் சொன்னான்.

” அங்குள்ள மாம்பழம் எல்லாம் ருசியாகவே இருக்காது, பண்ணையார் தோட்டத்து மாம்பழம்தான் ருசி அதிகமாக இருக்கும், அந்த மாம்பழம்தான் வேண்டும் ” என்று ஆனந்தி சொன்னாள்.

” ஏய், அது எப்படி கிடைக்கும்? நம்மூரில் உள்ள பெரியவர்களுக்கே அவர் தோட்டத்து மாம்பழம் கிடைக்காது, அவர் எதோ வெளிநாட்டிற்கு அந்த மாம்பழங்களை ஏற்றுமதி செய்கிறாராம், அதனால் அதை யாருக்கும் கொடுக்கமாட்டாராம் ” என்று கணேசன் சொல்ல

” அவர் தராவிட்டால் என்ன, நாம் போய் எடுத்துக் கொள்ளலாம் ” என்று ஆனந்தி சொன்னதைப் கேட்ட கணேசன் நடுங்கிப்போய்விட்டான். ( காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 1 )

” என்ன சொல்ற நீ! அவர் தோட்டம் முன்ன மாதிரி கிடையாது, இப்பொழுது அந்த தோட்டத்திற்கு ஒரு காவலாளி இருக்கிறார், பெரிய மீசை, கையில் ஒரு கம்பு என்று ஆளை பார்க்கவே பயமாக இருக்கும், அதெல்லாம் நம்மால் அங்கு போய் எடுக்க முடியாது ” என்று கணேசன் சொன்னான்.

” அதெல்லாம் முடியும், ராத்திரி ஏழு மணிக்கு போல டீக்கடைக்கு டீ குடிக்க போவார், அப்பொழுது நாம் போய் கீழே விழுந்து கிடக்கும் மாம்பழங்களை எடுத்துக்கொண்டு வந்து விடலாம் ” என்று ஆனந்தி சொன்னாள்.

” அதெல்லாம் கஷ்டமான காரியம், மாட்டிக்கொண்டால் அடி பின்னி விடுவார் ” என்று கணேசன் சொல்ல

” அதெல்லாம் எனக்கு தெரியாது, எனக்கு அந்த மாம்பழம் சாப்பிட்டே வேண்டும் ” என்று ஆனந்தி அடம்பிடித்தாள், வேறு வழியில்லாமல் கணேசனும் அதற்கு ஒத்துக் கொண்டான்.

கணேசனும் ஆனந்தியும் இரவு 7 மணி அளவில் தோட்டத்தின் அருகிலுள்ள கட்டிடத்தில் மறைந்திருந்து காவல்காரர் டீ குடிக்க போவதற்காக காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து காவல்காரர் தோட்டத்தில் இருந்து கிளம்பினார்.

” அவர் போய் விட்டார் சீக்கிரம் ஓடிவா ” என்று ஆனந்தி கணேசனை அவசரப்படுத்தி தோட்டத்துக்குள் கூட்டிச்சென்றாள்.

அவர்களுடைய நேரமோ என்னவோ! மாங்காய் அல்லது மாம்பழம் எதுவுமே தோட்டத்தில் கீழே விழுந்து கிடக்கவில்லை. மரத்தின்மேல் ஏறி தான் பறிக்கவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது.

” ஆனந்தி, கீழே ஒரு பழம் கூட விழவில்லை, அதனால் நாம் போய்விட்டு இன்னொரு நாள் வரலாம்.” என்று கணேசன் அவளை கூப்பிட்டான்.

” அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு மாம்பழம் சாப்பிட்டே ஆக வேண்டும், நான் மேலே ஏறி பறிக்க போகிறேன் ” என்று சொல்லிவிட்டு ஆனந்தி தோட்டத்தில் இருந்த ஒரு மாமரத்தின் மீது ஏறினாள்.

கணேசன் வேண்டாம் என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை, மரத்தின்மேல் ஏறி ஆனந்தி நான்கு பழங்களை பறித்து போட்டாள், அந்த பழங்களை ஆளுக்கு இரண்டாகப் எடுத்துக்கொண்டு இரண்டு பேரும் தோட்டத்தை விட்டு கிளம்பினார்கள். ( Tamil Novels Kaaval Devathai Episode 1 )

ஆனால் அதற்குள் தோட்ட காவல்காரர் வந்துவிட்டார், ஆனந்தியும் கணேசனும் கையில் மாம்பழங்களுடன் இருப்பதை பார்த்த காவல்காரர் அவர்களை பிடிக்க வந்தார். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடினார்கள்.

காவல்காரர் ஆனந்தி சென்ற பக்கமாக சென்று அவளைத் துரத்த ஆரம்பித்தார், அதைப்பார்த்த கணேசன் அவளை காப்பாற்றுவதற்காக அவர்கள் பின்னால் ஓடினான், ஆனந்தியை துரத்தி ஓடிய காவல்காரர் இன்னும் சிறிது நேரத்தில் அவளை பிடித்து விடுவார் என்ற நிலையில் இருக்க அவளைக் காப்பாற்றுவதற்காக கணேசன் கீழே கிடந்த கல்லை எடுத்து காவல்காரரின் தலையை நோக்கி எறிந்தான், அவரின் தலையில் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது, அதை பயன்படுத்திக் கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

சிறிது நேரத்திலே கணேசனின் வீட்டிற்கு பண்ணையார் மற்றும் தலையில் கட்டுடன் காவல்காரரும் வந்து அவனுடைய அம்மா சரஸ்வதியிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள்.

” பிள்ளையாகவா வளர்த்து வைத்திருக்கிறீர்கள், இந்த வயதிலேயே ரத்தம் வரும் அளவுக்கு கல்லை கொண்டு எரிகிறானே வளர்ந்து பெரியவன் ஆனால் என்னென்ன செய்வானோ, உங்கள் வளர்ப்பு சரியில்லை, வீட்டில் ஆம்பளை இல்லாமல் பொம்பளை வளர்த்தால் இப்படித்தான் தருதலையாக இருப்பான் ” என்று சரஸ்வதியிடம் பண்ணையார் மிகவும் கோபமாக பேசினார்.

பண்ணையாரிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு அனுப்பிவைத்த சரஸ்வதி கணேசனை பின்னி எடுத்து விட்டார், அடுத்த இரண்டு நாட்கள் கணேசன் தன் தாயிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருந்தான்.

” என்னடா ஆச்சு? அந்த பண்ணையார் உங்கள் வீட்டில் வந்து பிரச்சினை செய்துவிட்டு போனாரமே ” என்று ஆனந்தி கணேசனிடம் கேட்டாள். ( காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 1 )

” பண்ணையார் வீட்டிற்கு வந்து தன் தாயிடம் சண்டை போட்டதையும், அதன் பிறகு சரஸ்வதி அவனை அடி வெளுத்து வாங்கியதையும் ” ஆனந்தியிடம் சொன்னான்.

” நீ ஏன்டா அப்படி செஞ்ச? நீ எப்போதும் பயந்து கொண்டுதானே இருப்ப , அன்றைக்கு ஏன் அப்படி செய்த? “

” அவர் உன்னை பிடிக்க வந்தார், கொஞ்சம் லேட்டாயிருந்தா கூட உன்னை பிடித்திருப்பார், அதற்குப் பிறகு உன் வீட்டில் பிரச்சினையாய் இருக்கும். உன் அப்பா உன்னை அடிப்பார், உனக்கு எதுவும் பிரச்சினை வரக்கூடாது என்றுதான் கல்லை தூக்கி எறிந்தேன் ” என்று கணேசன் சொன்னான்.

” உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமாடா ” என்று தனது இமைகளை சிமிட்டிக்கொண்டு பரவசமாக கணேசனை கேள்வி கேட்டாள்.

” நீ என்னுடைய பிரண்ட், உன்னதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ” என்று கணேசன் ஆனந்தியிடம் சொன்னான்.

அன்றுமுதல்தான் கணேசனுக்காக எதுவும் செய்பவளாக மாறினாள் ஆனந்தி, கணேசனும் ஆனந்தியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இந்த உலகத்தில் யாருக்காகவும் கணேசனை விட்டுக்கொடுக்க ஆனந்தி தயாராக இல்லை.

இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்தது கணேசனுக்காக வினோத்தை அடித்து விட்டு அவள் அப்பாவிடம் திட்டு வாங்கினால் அல்லவா, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,

15 ஆண்டுகள் கழித்து நடப்பு காலகட்டம்

இடம் : சென்னையில் உள்ள B1 போலீஸ் ஸ்டேஷன்,

” மேடம், என்னை அடிக்காதீங்க இனிமேல் இப்படி தப்பு செய்ய மாட்டேன், தயவு செய்து விட்டு விடுங்கள், வலி தாங்க முடியவில்லை ” என்று லாக்கப்பில் பெண்ணின் தாலியை திருடிய கைதி கதறி கொண்டிருந்தான், அவனை ஒரு பெண் எஸ் ஐ லத்தியால் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள்.

” மேடம், உங்களை இன்ஸ்பெக்டர் கூப்பிடுகிறார் ” என்று கான்ஸ்டபிள் வந்து சொல்ல

” உன்னை நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் ” என்று கோபமாக சொல்லிவிட்டு அந்த எஸ் ஐ இன்ஸ்பெக்டரை பார்க்க சென்றாள்.

” ஆனந்தி, நீ ரொம்ப நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்துவிட்டது ” என்று இன்ஸ்பெக்டர் ஆனந்தி எஸ் ஐயிடம் சொன்னார்.

ஆமாம் அந்தப் பெண்ணை எஸ் ஐதான் நம் கதையின் நாயகி ஆனந்தி.

தொடரும் ………………

Tamil Novels Kaaval Devathai Episode 1 பதிவில் கணேசன் ஆனந்தி குழந்தைப்பருவ நட்பை அத்தியாயம் ஒன்றில் எழுதியுள்ளேன், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Tamil Novels Kaaval Devathai Episode 1 உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

காவல் தேவதை Tamil Novels Kaaval Devathai Episode 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *